You are lookin' for..?

Monday, March 22, 2010

எனது தொப்புள்கொடி உறவு.

எங்கள் ஊரில் உள்ள சில அழகு செல்ல பெயர்கள் - - -

தக்கடா - எங்கள் நண்பர் ரமேஷ் அவர்களின் பெயர் இது. காரணம்: அவரது நடை பூ போல் மென்மையானதாக, தேர் போன்று அசைந்து, ஆடி ஆடி இருக்கும்.

ஓம்கா - 'தயிர்வடை' தேசிகன் என்று ஒரு நகைசுவை நடிகர் இருந்தார்கள் நமது தமிழ் சினிமாவில். நான் ரசித்த நடிகர்களில் இவரும் ஒருவர். இவரை போல் 'ஓம்கா'வும் ஒல்லியாக இருப்பார். ஆனால், சண்டை வந்தால் இவரை கட்டுபடுத்த நான்கு ஆட்கள் வேண்டும். எந்த நேரமும் 'டிக்கெட்' வாங்கலாம் போன்ற 'உடல் உறுதியுடன்' இருப்பதால் இவருக்கு இந்த பெயர். வயது 25 இருக்கும். இந்த 'ஓம்கா' என்ற சொல்லை எங்கள் ஊர் மக்கள் எங்கு இருந்து எடுத்தனர் என்று எனக்கு உண்மையில் தெரியாது.

இந்த சொல்லை கையாள உங்களுக்கு ஒரு எளிய குறிப்பு: ஒரு மாணவன் தேர்வுக்கு தன்னை தயார் செய்யாமல் விளையாட்டுத்தனமா இருந்தால் (தேர்வு நேரத்தில்), எங்கள் மக்கள் இப்படியும் சொல்லுவார்கள் 'நீ இந்த வருடம் 'ஓம்கா'தான் என்று, அந்த மாணவனிடம். ஆக, ஒரு எதிர்மறை விசயத்திற்கு நீங்கள் இந்த வார்த்தையை கையாளலாம்.

கிறீச் & ஒற்றை கண் சிவராசன் - இரண்டாவதாக உள்ளதற்கு விளக்கம் தேவை இல்லை. நண்பர் ரமேஷ் அவர்களின் தம்பி இவர். இவர் மது பழக ஆரம்பித்து இருந்த நேரம். அனுபவம் நிரம்பியவர்கள், இவரையும் அழைத்து கொண்டு மது அருந்த. கடையில் ஏதோ வம்பு வர, இவர் 'பட்'என தனது இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து கொண்டு எதிரிகளின் மேல் பாய, ஒரே களேபரம். எங்கள் நண்பர்களே ஆடி போய் விட்டனர். ஆயுதம் எடுத்தால், அதை தரையில் உரசியபடி 'கிறீச்' என்று ஒலி எழுப்புவார்.

அப்பா மசின் (machine) - தனது மனைவியை பிரசவத்திற்காக மனைவியின் அம்மா வீட்டிற்கு அனுப்புவதே இவரது வேலை.

ஒன்றரை கோடி - ஏன் இவருக்கு இந்த பெயர் என்று எனக்கு தெரியாது.

தொப்புளி & மாவு - நல்ல குண்டாக இருப்பார்கள். எனவே 'மாவு'க்கான அர்த்தம் உள்ளது. முதலில் நான் குறிப்பிட்டு உள்ளதன் காரணம் எனக்கும் தெரியாது.

நரி - பத்து வயது சிறுவன். எனக்கு நண்பன். எங்கள் நண்பர்களுக்கு அடிபொடி தொண்டன்.

சோனி புறா - ஒரு இளம் பெண்ணின் செல்ல பெயர்.

பிலிபிலி - செல்லகண்ணு என்ற இரு பாட்டிகளின் பெயர். யாரிடம் சண்டை போட்டாலும் தோற்றதாக வரலாறு இல்லை. சண்டை இவர்கள் இருவரின் உயிர் மூச்சு. எனவே இந்த வித்தியாசமான செல்ல பெயர் இந்த செல்லகண்ணுகளுக்கு. இன்று இவர்கள் இருவரும் உயிருடன் இல்லை. எங்களது பிரார்த்தனை.

டொட்டடோ - எங்கள் நண்பர் சிம்பு அவர்களின் தாத்தா. ஜப்பான் நாட்டின் குடிமகன் இல்லை.

தொப்புளான் - எங்கள் ஊரில் உள்ள மிக வயதான தாத்தா குழுமத்தில் முதன்மையானவர். பெயர் காரணம் நான் அறியவில்லை.

கிண்டி - ஒரு நடுத்தர வயது பெண்.

Full Hand - எங்கள் ஊரில் முதன் முதலில் முழுக்கை சட்டை அணிந்த காரணத்தினால் இந்த பெயர் எங்கள் அண்ணனுக்கு.

ஆயா - ஆண்தான். எல்லோரிடமும் அன்பாக 'வா ஆயா, இல்ல ஆயா...' என்று மரியாதை செய்வதால்.

உருப்பிடி - ஆண்தான். இந்த பெயர் காரணம் எனக்கு தெரியாது.

நொ(ள்ளி)ல்லி - குட்டி தாதாவின் செல்ல பாட்டி. இவர் கோவத்தில் யாரையாவது திட்டினால் இந்த சொல் கூறுவார். இந்த வார்த்தையின் அர்த்தம் - அவருக்கும், தமிழ் அறிஞர்களுக்கும்.

வட்டி - தனது 15 வயதிற்குள் வட்டிக்கு பணம் பட்டுவாடா செய்த எங்கள் நண்பர்.

குட்டி தாதா/சாத்தான் - ஊரில் இரு நபர்கள் அல்லது குழு சண்டை அல்லது ஊரே சண்டை போட்டு கொண்டால், அதான் காரணம் எங்களின் இந்த நண்பன்தான். கவனிக்க வேண்டியது: எதாவது நல்லது செய்ய போய் இருப்பார், ஆனால் சண்டையில் முடிந்துவிடும்.

குடிகார குட்டி சாத்தான் - குட்டி தாதாவின் குரு. எங்கள் ஊரின் கதை சொல்லி, கவிஞன், பாடகன், இயக்குனர், இசை அமைப்பாளர், எழுத்தாளன், ஊரை சிரிக்க வைக்கும் மருத்துவன்.

அதிரடி - பேச்சும், செயலும் அந்த ரகத்தில் இருக்கும்.

உலகின் மிகப் பெரிய கிராமம் - வஞ்ச புகழ்ச்சி. எங்கள் அடுத்த கிராமம், மோரகுழி என்பது பெயர்.

அதை போல், எங்கள் சுற்று வட்டாரத்தில் சண்டை வந்தால், கண்டிப்பாக நீங்கள் கேட்கும் வசவு சொல் - 'உன்னை அடிச்சு கண்ணு ஒழுக விடல..' அல்லது 'அடிக்கிற அடில கண்ணு தண்ணி ஒழுகிடும்..' அல்லது 'அடிச்சா கண்ணு ஒழுகிடும்..' அல்லது இந்த விதத்தில் 'கண்ணு தண்ணி ஒழுகும்' வார்த்தைகளை கேட்கலாம். 'உன்னை கொன்னுடுவேன் மற்றும் வெட்டிபுடுவேன்' போன்ற வார்த்தைகளை விட இது எந்த விதத்தில் பயம் தரும்..?

வாண்ட ராயன் - எங்கள் மாமாவுக்கு இந்த பெயர். காரணம், இனிதான் அறிய வேண்டும்.

சாதி பிள்ளை - சுமார் 30 வருடங்களுக்கு முன் எங்கள் ஊரில் இந்த நண்பனை போல பாத்திரங்களுக்கு ஓட்டை அடைக்கும் நபர் இருந்தாராம்.


No comments:

Post a Comment