You are lookin' for..?

Saturday, October 23, 2010

தமிழ் சினிமா கீழான நிலையில் இருக்கிறது

பீப்லி (லைவ்) பற்றி சாரு நிவேதிதாவின் அனுபவம்.

பத்திரிகையாளராக இருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் அனுஷா ரிஸ்வியின் இயக்கத்தில் வெளிவந்து ஒரே வாரத்தில் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் படம் பீப்லி (லைவ்). விமர்சகர்கள் இந்தப் படத்தை பதேர் பாஞ்சாலியுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால் பதேர் பாஞ்சாலியில் இருந்த gloominess இதில் இல்லை என்பது இந்தப் படத்தின் விசேஷம். இந்திய கிராமங்களின் வறுமையைப் பற்றிய படமாக இருந்தாலும் படம் முழுவதும் இழையோடும் நகைச்சுவையும், பகடியும் இதை ஒரு சுவாரசியமான கலை அனுபவமாக மாற்றுகிறது. அமிதாப் பச்சன் உட்பட இந்திப் பார்வையாளர்கள் அனைவரும் ’இப்படி ஒரு படத்தைப் பார்த்ததே இல்லை’ என்று வியக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து இப்படி ஒரு முழுமையான ’ப்ளாக் காமெடி’யை இந்தி சினிமாவில் இதுவரை பார்த்ததில்லை. கேதான் மேத்தாவின் பாவ்னி பவாய் (1980), மிர்ச் மசாலா (1985) என்ற இரண்டு படங்களை மட்டுமே ஓரளவுக்கு ’பீப்லி (லைவ்)’ -இன் பக்கத்தில் வரக் கூடியவையாகச் சொல்லலாம். இரண்டுமே நஸ்ருத்தீன் ஷா நடித்தவை.

அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊடகங்கள் (குறிப்பாக, தொலைக்காட்சி சேனல்கள்) என்ற மூன்று மட்டத்திலும் நிலவும் ஊழலை மிகக் கடுமையாகவும், கிண்டலுடனும் விமர்சித்திருக்கிறார் இயக்குனர் அனுஷா ரிஸ்வி. பொதுவாக ஊடகங்களின் ஊழலைப் பற்றி விமர்சித்தால் ப்ளாக் லிஸ்ட் செய்யப்படுவோம் என்ற அச்சத்திலேயே யாரும் விமர்சிப்பதில்லை. பீப்லி (லைவ்) இந்த மூன்று மட்டத்திலும் நிலவும் ஊழலை மிகக் கடுமையாக விமர்சிக்கிறது.


’முக்கியப் பிரதேசம்’ என்ற மாநிலத்தில் பீப்லி ஒரு சிறிய கிராமம். நத்தா, புதியா என்ற இரண்டு சகோதரர்கள். நத்தாவுக்கு மனைவியும், மூன்று குழந்தைகளும், படுத்த படுக்கையான அம்மாவும் இருக்கிறார்கள். மூத்தவன் புதியா கொஞ்சம் புத்திசாலி. ஆனால் கஞ்சா கேஸ் என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை. விவசாயத்திற்காக வாங்கிய வங்கிக் கடனைத் திருப்ப முடியாததால் அவர்களின் நிலம் பறி போக இருக்கிறது. அந்த நிலையில் ஆளுங்கட்சி அரசியல்வாதியாக இருக்கும் உள்ளூர் தாதாவிடம் சென்று இருவரும் உதவி கேட்கிறார்கள். அதற்கு அவன் ”விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அரசாங்கம் ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகை தருகிறது; அது பற்றி யோசியுங்கள்; உங்கள் குடும்பமாவது பிழைத்துப் போகும்” என்று கிண்டல் செய்து அவர்களை விரட்டி விடுகிறான்.

யார் தற்கொலை செய்து கொள்ளலாம் என்பது பற்றி இருவரும் கலந்து ஆலோசிக்கிறார்கள். இந்த உரையாடல் படத்தின் மிக முக்கியமான பகடிகளில் ஒன்று.

புதியா: நானே தற்கொலை பண்ணிக் கொள்கிறேன்.
நத்தா: வேண்டாம், வேண்டாம். நானே பண்ணிக்கிறேன்.
புதியா: அட வேணாம்ப்பா. நீ புள்ளக்குட்டிக்காரன். உன்னால் எப்படித் தற்கொலை செய்து கொள்ள முடியும்? நானே பண்ணிக்கிறேன்.
நத்தா: ஆங், ஏன் என்னால் முடியாது. நான்தான் பண்ணிக்குவேன்.
புதியா: அப்படியா, பக்கா?

பிறகு சாராயக் கடையில் அமர்ந்து இருவரும் இது பற்றி மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதைத் தற்செயலாகக் கேட்கிறான் இந்திப் பத்திரிகையாளனான ராகேஷ். மறுதினமே ’ஏற்கனவே சொல்லப்பட்ட மரணம்’ என்ற தலைப்பில் நத்தாவின் கதை புகைப்படத்துடன் வெளியாகிறது. எப்போதுமே செய்திப் பஞ்சத்தில் இருக்கும் ஊடகங்களுக்கு இந்த விஷயம் பெரும் தீனியாக அமைகிறது. தில்லி ஊடகங்களில் இச்செய்தி பிரதான இடத்தைப் பிடிக்கிறது.

அத்தனை தொலைக்காட்சி சேனல்களும் தங்கள் குழுவை பீப்லி கிராமத்துக்கு அனுப்புகின்றன. ஒரு பெரிய சேனல் படையே பீப்லி கிராமத்துக்குத் திரண்டு வருகிறது. பீப்லி கிராமமே ஒரு பெரிய மேளா நடப்பது போல் ஆகி விடுகிறது. பாப் கார்ன், பலூன், கோக் விற்பனை, குடை ராட்டினம் என்று அமர்க்களப்படுகிறது.

நத்தாவின் தற்கொலையை எந்த சேனல் மக்களுக்கு முன்னதாகத் தெரிவிக்கிறதோ அந்த சேனலே டி.ஆர்.பி. தர வரிசையில் முன்னணி இடத்தைப் பிடிக்கும். அதை வைத்துத்தான் விளம்பரங்கள் கொடுக்கப் படுகின்றன. ’நத்தா தற்கொலை செய்து கொள்வாரா, மாட்டாரா?’ என்பது பற்றி சேனல்களில் அனல் பறக்கும் விவாதங்கள் இடம் பெறுகின்றன. நிருபர்கள் ‘லைவ்’ ஆக பீப்லியின் நிகழ்வுகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் நத்தாவின் தற்கொலையையே ’லைவ்’ ஆகக் காட்டினால் அவரே சிறந்த நிருபர்; அப்படிக் காட்டும் சேனலே முன்னணி சேனல். ஒவ்வொரு நிருபரிடமும் அந்தத் தீவிரம் தெரிகிறது. எனவே, நத்தா மலம் கழிக்கப் போகும்போது கூட அவர்கள் அவனைத் துரத்துகிறார்கள்.. செய்திகளைத் திரட்டுவதில் தீவிர ஆர்வம் கொண்ட குமார் தீபக் என்ற இந்தி சேனல்காரன் ஒரு தற்காலிகமான டவரை அமைத்து அதன் மேல் ஏறி நத்தா மலம் கழிக்கும் இடத்தைத் தேடுகிறான்.

ஒருநாள் நத்தா மலம் கழிக்கச் செல்லும் போது போலீஸ் மற்றும் சேனல் நிருபர்களின் துரத்தலையும் மீறித் தப்பி விடுகிறான் நத்தா. அப்போது நத்தா மலம் கழித்திருக்கும் இடத்தை வைத்து அவனுடைய ‘உளவியலை’ டி.வி. பார்வையாளர்களுக்கு விளக்க முயற்சிக்கிறான் குமார் தீபக். அதுவும் ஒரு ’வித்தியாசமான’ அணுகுமுறை அல்லவா? அதனால் கூட டி.ஆர்.பி. ரேட்டிங் அதிகரிப்பதற்கு வழி இருக்கிறது அல்லவா?

அதைத் தொடர்ந்து, ’பீப்லி மாதா என்ன சொல்கிறாள்?’ என்று ஒரு ’லைவ்’ நிகழ்ச்சியைக் காண்பிக்கிறான் குமார். இரண்டு கிராமத்துப் பெண்கள் சிவப்புப் புடவை அணிந்து தலையை அவிழ்த்துப் போட்டுக் கொண்டு சாமியாடுகிறார்கள். ’நத்தா தற்கொலை செய்து கொள்வானா இல்லையா?’ ’செய்து கொள்வான், செய்து கொள்வான்’ என்று சொல்கிறது சாமி.

நத்தாவின் பால்ய கால சிநேகிதனிடம் பேட்டி எடுக்கிறார்கள். நத்தா காணாமல் போனதற்கான காரணங்கள் சேனல்களில் ஆராயப்படுகின்றன. ’நத்தா காணாமல் போனதற்கு யார் காரணமாக இருக்க முடியும்?’ என்று பார்வையாளர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது.

ஒரு கருத்துக் கணிப்பு “முஸ்லீம் தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம்” என்று சொல்கிறது.

ஊடகங்களுக்கும் ஆட்சியாளர்களுக்குமான கள்ள உறவையும் முகத்தில் அடித்தாற்போல் காண்பிக்கிறார் இயக்குனர். ஆங்கில சேனலை சேர்ந்த நந்திதா விவசாயத் துறை மந்திரியான நஸ்ருத்தீன் ஷாவை நத்தாவின் தற்கொலை விஷயமாகப் பேட்டி காண்கிறாள். பேட்டிக்கு முன் வெகுநாள் பழகிய நண்பர்களைப் போல் பேசிக் கொள்ளும் அவர்கள் பேட்டியின் போது வேறு தொனியில் ஏதோ முதல்முதலாக சந்தித்துக் கொள்வது போல் பேசுகிறார்கள்; அதைப் போலவே குமார் தீபக் ’முக்கியப் பிரதேச’த்தின் முதல் மந்திரியிடம் அவருடைய கட்சித் தொண்டனைப் போல் பேசிக் கொண்டிருந்து விட்டு, கேமராவுக்கு முன்னால் முதல் மந்திரியை முதல்முதலாகப் பார்ப்பவனைப் போல் பேசுகிறான். இதுவரை இந்திய சினிமாவில் ஊடகங்களைப் பற்றிய இவ்வளவு காட்டமான விமர்சனம் வந்ததில்லை. இந்தியாவைக் கொள்ளையடிப்பதிலும், விதேசி கம்பெனிகளுக்கு தரகு வேலை பார்ப்பதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களோடு ஊடகங்களும் ஆதரவாக இருந்து கூட்டுச்சதி செய்கின்றன என்பதுதான் ’பீப்லி (லைவ்)’ -இன் உபகதை.

இந்திப் பத்திரிகையாளனான ராகேஷ் நந்திதாவின் சேனலில் சேர்வதற்கு விருப்பப்படுகிறான். நத்தாவைப் பற்றி முதலில் செய்தி தந்தவன் என்ற முறையில் அவன் மீது ஆர்வம் காட்டுகிறாள் நந்திதா. ஆனால் பீப்லி கிராமத்தில் வேறொரு விவசாயி தண்ணீருக்காக ஒற்றை ஆளாக கிணறு தோண்டித் தோண்டி செத்துப் போகிறான். ”இந்த விவசாயியின் மரணம் செய்தி இல்லையா?” என்று நந்திதாவிடம் ஆக்ரோஷமாகக் கேட்கிறான் ராகேஷ். “இல்லை. நத்தாதான் நமக்கான செய்தி. அந்த ஊர் பெயர் தெரியாத இன்னொரு விவசாயியைப் பற்றி செய்தி சேகரிக்க நாம் இங்கே வரவில்லை. இப்படியெல்லாம் முக்கியமில்லாத செய்திகளில் கவனம் செலுத்துவதாக இருந்தால் நீ தவறான உத்தியோகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய் என்று அர்த்தம்” என்கிறாள் நந்திதா.

கதை பீப்லி கிராமத்தில் மட்டும் நடக்கவில்லை. நகரமும் கிராமுமாக மாறி மாறிச் செல்கிறது. விவசாயத் துறை மந்திரியின் செயலாளர் சென் குப்தாவிடம் நத்தாவின் பிரச்சினை பற்றிக் கேட்கப் படுகிறது. இது தற்கொலை குறித்த விஷயமாக இருப்பதால் இதை உயர்நீதி மன்ற நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி விடுகிறார் அவர். நிருபர்கள் சென் குப்தாவிடம் இது பற்றிக் கேட்கும் போதெல்லாம் ”உயர்நீதி மன்ற உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்” என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். படம் முழுவதும் இந்த பதில் சொல்லப்படும் போதெல்லாம் ஒரு மிகப் பெரிய அபத்த நாடகத்தின் அங்கத்தினர்களாக இருக்கும் பார்வையாளர்களின் சிரிப்பில் அரங்கம் அதிர்கிறது.

இந்தப் பிரச்சினை விவசாயத் துறை மந்திரியிடம் (நஸ்ருத்தீன் ஷா) வரும் போது அவர் ஒரு யோசனை சொல்கிறார். ’நத்தா கார்டு’ என்று ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வோம். அதன்படி ஏழை விவசாயிகளுக்கு இலவசக் கடன் வழங்கப்படும். ஆனால் அதற்கெல்லாம் மத்திய அரசிடம் நிதி இருக்காதே? ”நிதியைப் பற்றி மாநில அரசல்லவா கவலைப்பட வேண்டும்? திட்டத்தை மட்டும் நாம் போடுவோம். அதை நிறைவேற்றுவது மாநில அரசின் பொறுப்பு. நிறைவேற்றினாலும் மாநில அரசுக்குப் பிரச்சினை. (அரசே திவாலாகி விடும்). நிறைவேற்றா விட்டாலும் பிரச்சினை. மத்திய அரசின் மக்கள் நலத் திட்டத்தை நிறைவேற்றாத மாநிலக் கட்சி தேர்தலில் தோற்று விடும்” என்கிறார் மாநிலக் கட்சிக்கு எதிரான தேசியக் கட்சியைச் சேர்ந்த மத்திய விவசாயத் துறை மந்திரி.

இதற்கிடையில் அந்தத் தொகுதியில் தேர்தலும் வர இருப்பதால் நத்தாவின் தற்கொலைச் செய்தி மிகுந்த சூடு பிடிக்கிறது. இந்தப் பிரச்சினையின் காரணமாகவே ஆளும் மாநிலக் கட்சி தோற்று விடுமோ என்ற பதற்றம் ஏற்படுகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசியக் கட்சிக்கும் மாநிலக் கட்சிக்கும் நத்தாவை முன்வைத்து பெரும் போட்டி ஏற்படுகிறது. நத்தா தற்கொலை செய்து கொண்டால் மாநிலக் கட்சி தோற்று விடும். அதனால் நத்தாவின் குடும்பத்துக்கு லால்பகதூர் திட்டத்தின் கீழ் ஒரு தண்ணீர் பம்ப் கொடுக்கிறார் முதலமைச்சர். ஆனால் அந்த பம்ப் கிராமத்துச் சிறுவர்களுக்கு விளையாட்டுப் பொருளாக மட்டுமே பயன்படுகிறது. உள்ளூர் அரசியல்வாதி ஒருவன் நத்தா குடும்பத்துக்கு ஒரு கலர் டிவியை வாங்கிக் கொடுத்து தன் கட்சிக்கு ஓட்டு சேகரிக்கலாம் என்று திட்டமிடுகிறான். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் அரசுத் திட்டங்களைப் பற்றிய கிண்டல் எக்காளமிடுகிறது. இந்த நேரத்தில் முதல் மந்திரிக்கும் லோக்கல் தாதாவுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் தாதா புதியாவை மிரட்டுகிறான்: ”இன்னும் இரண்டு நாளில் நத்தா சாகவில்லையானால் நீ செத்து விடுவாய்.”

கடைசியில் நத்தாவைத் தனியாக விட்டால் தற்கொலை செய்து கொள்வான்; அதனால் தன் கட்சி தோற்று விடும் என்று அஞ்சும் முதல்மந்திரி போலீஸை விட்டு நத்தாவைக் கடத்திக் கொண்டு வந்து ஒரு கிடங்கில் போட்டு அடைத்து விடுகிறார். ஆனால் இதைக் கண்டு பிடித்து விடும் ராகேஷ் அங்கே வரும்போது கிடங்கு தீப்பற்றி விடுகிறது. தீயில் ஒரு பிணம் கிடைக்கிறது. அதுதான் நத்தா என்று முடிவு செய்யப்படுகிறது. ஆனால் தீயில் இறந்தது ராகேஷ் என்பது பார்வையாளர்களுக்கு சூசகமாக உணர்த்தப்படுகிறது. நத்தா பிரச்சினை முடிந்து சேனல்காரர்கள் பீப்லியை விட்டுக் கிளம்பும்போது ”எங்கே ராகேஷ், கொஞ்ச நாட்களாக ஆளையே காணோம்?” என்கிறாள் நந்திதா.

நத்தா தற்கொலை செய்து கொள்ளாமல் தீ விபத்தில் இறந்ததால் நஷ்ட ஈடு ஒரு லட்ச ரூபாய் நத்தா குடும்பத்துக்குக் கிடைப்பதில்லை. இறுதிக் காட்சியில் ஒரு நகரத்தில் கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது. கட்டிடத் தொழிலாளிகளின் இடையே மிகுந்த சோர்வுடன் அமர்ந்திருக்கிறான் நத்தா.

பீப்லி (லைவ்)-இன் மற்றொரு சிறப்பு அம்சம், இதில் பங்கேற்றிருக்கும் அத்தனை நடிகர்களின் அசாதாரணமான நடிப்பு. அதிலும் குறிப்பாக ஓம்கார் தாஸ் மணிக்புரி (நத்தா), ரகுபீர் யாதவ் (புதியா), படுக்கையிலேயே கிடக்கும் அம்மா (ஃபரூக் ஜாஃபர்), ஷாலினி வத்ஸா (நத்தாவின் மனைவி) ஆகியோரின் நடிப்பு இந்தி சினிமாவுக்குப் புதிது. நத்தாவை சேனல்காரர்கள் ஒரு சர்க்கஸ் விலங்கைப் போல் பாவித்து படமெடுக்கிறார்கள். அதற்குத் தோதாக நத்தாவின் ஒவ்வொரு அசைவும் சர்க்கஸ் பிராணியைப் போலவே இருக்கிறது. படத்தின் முக்கியமான பாத்திரங்கள் அனைவரும் இந்தி நாடகாசிரியர் ஹபீப் தன்வீரின் ’நயா தியேட்டர்’ என்ற நாடகக் குழுவைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் இந்தப் படம் எடுக்கப்பட்ட பத்வாய் (மத்தியப் பிரதேசம்) என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள். தமிழ் சினிமாவில் நாடக நடிகர்களின் பங்கேற்பை நினைத்தால் அது கண்ணீரை வரவழைக்கும் சோகக் கதை. நிஜ நாடக இயக்கத்தைச் சேர்ந்த மு. ராமசாமி ’களவாணி’யில் பெரியப்பா வேடத்தில் வருகிறார். பரிதாபமாக இருந்தது. இதை கோடம்பாக்கத்தில் உள்ள எந்தத் துணை நடிகரும் செய்து விட முடியும். அதேபோல் கூத்துப் பட்டறை நடிகர்களை தமிழ் சினிமா எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதைப் பற்றித் தனியாக எழுத வேண்டியதில்லை. பாவம், பசுபதி படும் பாடே போதும்.

ஷங்கர் ராமனின் ஒளிப்பதிவும் சர்வதேசத் தரம் வாய்ந்ததாக உள்ளது. அநேகமாக பீப்லி (லைவ்) ஆஸ்கரில் சிறந்த வெளிநாட்டுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.

இதன் தயாரிப்பாளர் ஆமிர் கான். லகானிலிருந்து தாரே ஸமீன் பர், மூன்று முட்டாள்கள், பீப்லி (லைவ்) வரையிலான ஆமிரின் பயணம் இதுவரை வேறு எந்த இந்திய சினிமா நடிகரும் செய்திராத சாதனை. இந்திய அரசுக்கு எதிரான இவ்வளவு கடுமையான அரசியல் சினிமாவை எடுக்க தமிழில் ஒரு நடிகருக்காவது தைரியமும் துணிச்சலும் வருமா என்று யோசித்துப் பார்க்கிறேன். அது மட்டுமல்ல; படத்தின் எந்த இடத்திலும் ஆமிர் கான் என்ற தயாரிப்பாளரும், நடிகரும் எட்டிப் பார்க்கவே இல்லை. முதலில் ஓம்கார் தாஸ் மணிக்புரி நடித்திருக்கும் நத்தா பாத்திரத்தில் ஆமிர் கான் தான் நடிப்பதாக இருந்திருக்கிறது. ஆனால் ’ஆடிஷன்’ தேர்வின் போது ஆமிரை விட ஓம்கார் தாஸ் சிறப்பாகச் செய்ததாக ஆமிர் கான் நினத்ததால் ஓம்கார் தாஸையே அந்தப் பாத்திரத்தைச் செய்யும்படி சொல்லியிருக்கிறார். ’சினிமா முக்கியமல்ல; நாம்தான் முக்கியம்’ என்று நினைக்கும் தன்முனைப்பு நடிகர்களால் நிரம்பியுள்ள தமிழ் சினிமா ஏன் இவ்வளவு கீழான நிலையில் இருக்கிறது என்பதை இந்த ஒரே சம்பவத்தை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய ஆபாசமான 150 கோடி பட்ஜெட் சினிமாக்காரர்கள் யோசிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது. வெறும் 10 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ள ‘பீப்லி (லைவ்)’, அது வெளிவந்த முதல் வாரத்திலேயே 21 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாபி தியோலின் ’ஹெல்ப்’புக்கு வசூலே இல்லை. இதனால் மசாலா படங்கள் மட்டும்தான் வசூல் ரீதியாக வெற்றி அடையும் என்ற மிகப் பெரிய கட்டுக்கதை பொய்யாகி இருக்கிறது. மேலும், மசாலா படங்கள்தான் சுவாரசியமாக இருக்கும்; சீரியஸான கதைக் களனைக் கொண்ட படங்கள் சுவாரசியமாக இருக்காது என்ற கட்டுக்கதையும் இந்தப் படத்தினால் உடைந்திருக்கிறது. மூன்றாவது கட்டுக்கதை, பெரிய நடிகர்கள் பற்றியது. பீப்லி (லைவ்)-இல் நஸ்ருத்தீன் ஷா மற்றும் ரகுபீர் யாதவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சினிமாவுக்குப் புதிய முகங்கள்.

செயற்கைக் கோள், ராக்கெட் போன்ற சாதனங்களைத் தயாரிக்கும் அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாசாமி போன்றவர்களும், மன்மோகன் சிங்குகளும் இந்தியா வல்லரசாகி விட்டது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இந்திய கிராமங்கள் அவை இருந்த தடமே இல்லாமல் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் வாழவே முடியவில்லை. சாலைகள் இல்லை; பள்ளிக்கூடம் இல்லை; மருத்துவமனைகள் இல்லை. தண்ணீர் இல்லை; வாழ்வாதாரங்கள் இல்லை. ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் உயிர் தரித்திருக்கும் விவசாயிகளுக்கும் போலீஸுக்கும் மோதல். சட்டீஸ்கர் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஆதிவாசிகளின் நிலங்களை பன்னாட்டு வியாபார நிறுவனங்களுக்கு விற்று விட்டார்கள் தில்லி அரசியல்வாதிகள்.

சுதந்திர தினம் என்பது வெறும் கொடியேற்றும் சடங்காகி விட்டது. சட்டைப் பாக்கெட்டில் கொடிச் சின்னத்தை குண்டூசியால் குத்திக் கொள்வதும் அரசியல்வாதிகளின் சுதந்திர தின உரைகளும்தான் சுதந்திர தினத்தின் அடையாளங்களாக மிஞ்சியிருக்கின்றன. காஷ்மீர் முதல்வர் அப்துல்லா கொடியேற்றும் போது பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் ஒருவர் சப்பாத்தை எடுத்து வீசியிருக்கிறார். சட்டீஸ்கரில் போலீஸ்காரர்கள் கொத்துக் கொத்தாக மாவோயிஸ்டுகளால் கொல்லப்படுகிறார்கள். ஒரு பக்கம், அரசாங்கத்தின் சேமிப்புக் கிடங்குகளில் கோதுமையும் அரிசியும் விநியோகிக்கப்படாமல் கெட்டுப் போய்க் கிடக்கின்றன. இதெல்லாம்தான் இந்தியாவின் சமகால வரலாற்றின் மறுபக்கம். இந்த மறுபக்கத்தின் மீது ஆமிர் கான் கவனம் செலுத்தியிருக்கிறார். இந்த வகையில் இந்த ஆண்டின் சுதந்திர தினத்தில் வெளியாகியிருக்கும் ’பீப்லி (லைவ்)’ அரசியல்வாதி, அதிகார வர்க்கம், ஊடகம் என்ற மூன்றின் மீதும் வைக்கப்பட்டிருக்கும் மிகக் கடுமையான விமர்சனம்.

மிக மோசமான ஒரு வறுமைச் சூழலை இத்தனை பகடியுடன் எடுக்க முடியுமா என்று யோசித்தால் சார்லி சாப்ளினின் மௌனப் படங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. ஆனாலும் இந்தப் படத்தை வேறு எந்தப் படத்தோடும் ஒப்பிட முடியாதபடி இருப்பதே இதை ஒரு மறக்க முடியாத கலாஅனுபவமாக ஆக்கி விடுகிறது. ஓம்கார் நாத்துக்கு வசனம் மிகவும் குறைவு. ஒரு இடத்தில் நத்தாவின் ஆடு கூட அவனைத் தூங்க விடாமல் தொந்தரவு செய்கிறது. அவனுடைய மகனும் “நீ எப்போது தற்கொலை செய்து கொள்வாய்?” என்று கேட்கிறான். அப்பா தற்கொலை செய்து கொண்டால் கிடைக்கும் பணத்தில் படித்து போலீஸ்காரன் ஆகலாம் என்று நினைக்கிறான் சிறுவன்.

மத்தியப் பிரதேசத்துக்கும், உத்தரப் பிரதேசத்துக்கும் நடுவில் உள்ள Bundelkhand மாவட்டத்தின் வட்டார மொழி மிகுந்த கெட்ட வார்த்தைகளைக் கொண்டது. அந்த வட்டார மொழியில் எடுக்கப்பட்டிருப்பதால் பீப்லி (லைவ்)-க்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கிறது. (உ-ம்) நத்தாவும் புதியாவும் லோக்கல் தாதாவிடம் கடன் கேட்கப் போகிறார்கள். வழிநடையாகச் செல்லும் போது நத்தா ஜாலியாகப் பாடிக் கொண்டே போகிறான். அப்போது புதியா அவனிடம் “இங்கே குண்டி கிழியுது; உனக்கு பாட்டு கேக்குதா?” என்று அதட்டும் காட்சி.

இந்தப் படத்தின் இசை பற்றித் தனிக் கட்டுரையே எழுதலாம். நகீன் தன்வீர், ராம் சம்பத் என்ற இருவரும், இண்டியன் ஓஷன் என்ற ராக் குழுவும் சேர்ந்து பீப்லி (லைவ்)-க்கு இசை அமைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நாட்டுப்புற இசை பற்றி ஏராளமாக பேசப்பட்டது. ஆனால் உண்மையான தமிழ் நாட்டுப்புற இசை தமிழ் சினிமாவில் பிரதிபலிக்கவில்லை என்பது என் கருத்து. நாட்டுப்புற இசையிலிருந்து சிறிது சிறிதாகப் பிய்த்து எடுத்து அதை பாரதிராஜாவின் ’ரொமாண்டிக்’ கிராமத்துக்கு ஏற்றாற்போல் ஜிகினா வேலை செய்து கிளுகிளுப்பாக்கினார்கள். பீப்லி (லைவ்)-இல் இப்படி நடக்கவில்லை. இந்தியாவின் உண்மையான நாட்டுப்புற இசையை இதில் கேட்க முடிகிறது. இந்தி புரியாவிட்டாலும் பரவாயில்லை, பீப்லி (லைவ்)-இல் ரகுபீர் யாதவ் (புதியா) பாடியுள்ள ’மஹங்காய் தயான்’ என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். இப்படி ஒரு குரலையும், பாடலையும் நம்முடைய கிராமங்களில் கேட்டிருக்கிறோம்; ஆனால் தமிழ் சினிமாவில் கேட்டதில்லை. பருத்தி வீரன் மட்டுமே விதி விலக்கு. அதேபோல் தேஷ் மேரா, ஜிந்தகி ஸே டர்த்தே ஹோ என்ற இண்டியன் ஓஷனின் இரண்டு பாடல்கள், நகீன் தன்வீர் பாடிய ’சோலா மாட்டி கே ராம்’, போன்ற பாடல்களும் குறிப்பிடத் தக்கவை. இந்தக் குரல்களையும், இந்த இசையையும் இதுவரை இந்தி சினிமா பார்த்ததில்லை. அந்த வகையில் ’பீப்லி (லைவ்)’-இன் இசை இந்தி சினிமாவில் நடந்திருக்கும் புரட்சி என்று சொல்லலாம்.

நன்றி: சாரு நிவேதிதா.

No comments:

Post a Comment