You are lookin' for..?

Friday, February 4, 2011

ஈழத்தமிழ் சகோதரியின் ஆதங்க மடல்

நீங்கள் படிக்கும் இந்த விடயம் எனக்கு உடுமலைபேட்டையை சேர்ந்த ஆதி/மலர் இனியன் என்பவர் e-mail செய்திருந்தார். இந்த முகம் அறியா தோழர் ஒரு 'கொள்கையுடன்' செயல்படுவதும், சில விசயங்களை நடத்தி செல்வதும் அவரது e-mail மூலமாக அறிந்து கொண்டேன். என்னை அவர் எப்படி அறிந்துகொண்டார் என்பது எனக்கு தெரியாது. அவரது e-mail களுக்கும் நான் reply செய்ததில்லை. என்னை மன்னியுங்கள், தோழரே.

இந்த விடயம் முன் வைக்கும் விசயங்களை நீங்கள் உள் வாங்கிகொள்ளும் முறையும், எதிர் வினையும் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது மற்றும் பல உண்மையான உள்ளங்களின் அவா.

திரைப்படப் பாடலாசிரியை, அக்கா தாமரை அவர்களுக்கு ஒரு ஈழத் தமிழச்சியின் ஆதங்க மடல்.

அன்புடன் அக்கா தாமரை அவர்களுக்கு வணக்கம்!

நான் தமிழீழம், கிளிநொச்சியை பிறப்பிடமாகக்கொண்டவள். உங்களுடைய "வசீகரா என் நெஞ்சினிக்க" என்ற பாடல் எல்லோரையும் கவர்ந்ததுபோல் என்னையும் மிகவும் கவர்ந்திருந்தது. அந்தப்பாடலின் கவி நயமும் இனிமையும், தவிர வேறெதையும் நான் அறிய முயற்சிக்கவுமில்லை. ஆனால் அப்பாடலில் அப்படி ஒருவித்தியாசம் இருப்பதாக மனது உணர்ந்து கொண்டது. சிலகாலங்களுக்குப்பின் அந்தப்பாடலை எழுதியது ஒரு பெண்கவிஞர் என்றும், பெயர் தாமரை என்றும் படித்து அறிந்தேன், மனம் மகிழ்ச்சியை தோற்றியது. அந்த மகிழ்ச்சி ஏன் தோன்றியதென்பதுகூட எனக்குத் தெரியவில்லை.

நவீன கலை இலக்கியத்துறையில் குறிப்பிடும்படி தமிழகத்து பெண்கள் சிலர் இருந்தாலும், அனேகர் பட்டிமன்றங்களிலும் மேடை கவியரங்குகளில் மட்டுமே தங்களை வெளிப்படுத்த முடிந்திருந்த வேளையில், சினிமாவில் அதுவும் ஆண்களின் ஆதிக்கத்திலிருந்த ஒரு துறைக்குள், புரட்சிகரமாக ஒரு பெண் பாடலாசிரியர், வியப்பும் பெருமையுமாக இருந்தது. தொடர்யுத்தத்தினால் மூழ்கிக்கிடந்த ஈழத்தவள் நான் என்பதால், மிக அரிதாக காணக்கிடைக்கும் சினிமா, தொலைக்காட்சி, சில புத்தகங்கள் போன்ற ஊடகங்கள் மூலம் அறிதல் தவிர வேறு வழியில் தமிழகத்து கலையை அறிந்துகொள்ளக்கூடிய சந்தற்பமுமில்லை. இப்போ புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கிறேன்.

தாங்கள் 20.01.2011 திகதியிடப்பட்டு சீமானுக்கு என்று குறிப்பிடப்பட்டிருந்த மடல் வாசிக்கும் சந்தற்பம் கிடைத்தது. வாசித்தேன், சிந்தித்தேன். நீங்கள் சீமானுக்கு என்று விளித்திருக்கும் மடல், வெகுஜன ஊடகங்களில் வெளியிடப் பட்டிருப்பதிலிருந்து ஏதோ வில்லங்க விளையாட்டு என்பதை மட்டும் மனம் கீச்சுமூச்சு காட்டி உணர்த்தியது. தாங்கள் சீமானுக்கு அனுப்பிய மெயில், தவறுதலாக ஊடகங்களிடம் சிக்கிவிட்டதா, அல்லது நீங்கள்தான் பகிரங்க மடல் என்று குறிப்பிடாமல் ஒருதலைப்பட்சமாக யாரோ சிலருக்கு உதவும் நோக்கில் அந்த மடலை ஊடகங்களுக்கு தந்திருந்தீர்களா என்று சுய விசாரணை மனதுக்குள் நடத்திக்கொண்டிருக்கிறேன்.

தாங்கள் கிளப்பியிருக்கும் கேள்விகளுக்கும் ஆதங்கங்களுக்கும் ஏதாவது தீர்வு எட்டமுடியுமா, அல்லது ஏதாவது முயற்சியாவது செய்யலாமா என்றால், அவை தமிழகத்திலுள்ள தமிழ் மக்களால்தான் ஈட்டமுடியும். அதற்கும் அதிகபட்சம் உங்களைப்போன்ற, தமிழகத்து உணர்வாளர்கள் தான் ஒன்று திரண்டு நல்லமாற்றத்தை தோற்றுவிக்கவும் வேண்டும். களமும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. அதற்கு நீங்களும் முயற்சிக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

ஆனால் நீங்கள் எந்தக்கட்சியையும் சார்ந்தவளில்லை என்றும், இனியும் இப்படியே இருக்க விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள், அப்படியெனில் உங்களால் எப்படி சமூகம் சார்பாக அரசியலில் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது. மக்கள் நலனுக்காக ஏதோ ஒன்றை மாற்ற வேண்டுமென்ற துடிப்பு வரும்போது, மறுபுறத்தே நின்று பற்றிப் பிடித்தால்தானே மாற்றத்தை காணமுடியும், அதை தவிர்த்து அதிகாரத்தை கைப்பற்றக்கூடியவர்களிடம் ஏன் பொல்லாப்பு என்று ஒரு பக்கச்சார்பான கருத்தையும் வெளிப்படுத்தி, நான் கட்சி சார்பற்றவள் என்று நழுவல்போக்கை கடைப்பிடிக்கலாமா? என்பதும் என் சிறுபுத்திக்குள் கேள்விக்குறியாகி குடைகிறது.

மக்கள் ஜனநாயகம் என்று கூறிக்கொள்ளும் ஒரு நாட்டில், கண் கொண்டு பார்க்கமுடியாத ஊழலும், லஞ்சமும், மன்னராட்சியை ஒத்த மனித வழிபாட்டு கிலிசகேடுகளும், கலாச்சார சீர்கேடுகளும், கட்டப்பஞ்சாயத்தும், ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தி நீரூற்றி வளர்க்கப்படும்போது, தட்டிக்கேட்கக்கூடிய இடத்தில் இருப்பவர்தானே தட்டிக்கேட்க முடியும். மக்களுக்கு சரியான வழிமுறைகளை சொல்லிக்கொடுக்கும் கடமை அவர்களுக்குத்தானே உண்டு. குறைந்தபட்ஷம் மற்றவர்களுக்காக அல்லாவிட்டாலும் தமது சொந்த வாரிசுகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டாவது, சரியில்லாதவற்றை எதிர்த்து சரியெனக்காணப்படும் வலுவுள்ள சக்திக்குத் துணை நின்றால்தானே மாற்றத்தைக் காண முடியும்.

தமிழ்நாட்டு அரசியல் பற்றிப்பேச என்னிடம் அவ்வளவு அரசியலறிவில்லை. அத்துடன் தமிழகத்தின் உள்ளூர் அரசியலில் மூக்கு நுழைப்பதும் எனக்கு சரியாக இருக்காது. இருந்தாலும், அரசியல் ஒன்று இல்லாது ஈழத்தில் நாதியற்று துடித்த எம்மினத்துக்காக, இன-மொழி-மான-உணர்வு கொண்டு, ஈடுபாட்டுடன் நீங்கள் எங்களுக்காக குரல்கொடுப்பதும், உங்களைப்போல இன்னும், இன உணர்வுள்ள பலர் காலாகாலமாக தொடர்ந்து எமக்காக போராடிவருவதும், தமிழ்நாட்டு தமிழர்கள் கடலால் பிரிக்கப்பட்டிருந்தாலும் தமிழால், உறவுமுறையால், எங்கள் உறவினர்தான் என நாங்கள் தொடர்ந்து நம்பிவருகிறோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் "தாமரையும்" சரி, சீமானும் சரி, வைகோவும் சரி, ஐயா நெடுமாறன் அவர்களும் சரி, இன்னும் உணர்வாளர்கள் எவராகினும். எவரையும் நாங்கள் பிரித்துப்பார்த்ததுமில்லை, ஆனால் நாங்கள் பட்ட மிகவும் கசப்பான மானுடம் காணாத கொடுமையான அனுபவங்களை, கண்ணால் காணாவிட்டாலும் கேள்விப்பட்ட வரையிலாவது எல்லோரும் புரிந்துகொள்ளுவீர்கள் என்றே நம்புகின்றேன்.

தமிழகம் தேர்தலை சந்திக்க இருக்கும் இந்தக்குறுகிய தருணத்தில், ஜெயலலிதாவையும் அ.தி.மு.க வையும் சீமான் ஆதரிப்பது எங்கள் நெஞ்சங்களில் ஆயிரம் இடிகளை ஒன்றாக இறக்கியுள்ளது என்று நொந்து குறிப்பிட்டிருக்கிறீர்கள்!. அதற்கான காரணமாக கடந்தகாலங்களில் ஜெயலலிதா நடந்துகொண்ட விதத்தையும் குறிப்பிட்டு ஞாபகப்படுத்தியிருந்தீர்கள். உங்கள் ஆதங்கம் ஆத்திரம் நியாயமானதாக இருந்தாலும், (நீங்கள் ஈழத்தமிழர்கள் பற்றிய அரசியலை காரணம் காட்டியதால்) ஒன்றை குறிப்பிட்டுக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன் ஜெயலலிதா அவர்கள் பற்றி எங்களுக்கும் கசப்பான அனுபவம் உண்டு என்பதும் மறுக்கவில்லை.

ஆனாலும் காலாகாலமாக ஜெயலலிதா விடுதலைப்புலிகளை நேரடியாகவே எதிர்த்து அரசியல் செய்து வந்திருக்கிறார். ஆனால் கருணாநிதி நல்லவர்போல் பாசாங்கு செய்து ஜெயலலிதாவின் புலி எதிர்ப்பை தனக்குச்சாதகமாக பயன்படுத்தி, வஞ்சகமாக நடந்துகொண்டது ஒன்று இரண்டல்ல. 2009 யுத்த இறுதியிலும் கொடு வஞ்சனை புரிந்து கோல்லப்பட்ட 100,000 மேலான தமிழர்களின் ஒவ்வொரு படுகொலையிலும் மறைமுகமாக, நேரடியாக கருணாநிதி சம்பந்தப்பட்டிருக்கிறார். இதற்கான ஆதாரங்கள் நிறையவுண்டு.

ராஜபக்க்ஷ சிங்களவன், ஆனால் கருணாநிதி தன்னை தமிழன் என்று சொல்லுகிறார். ஈழத்தமிழினத்துக்கு அரசியலைத் தாண்டி ராஜபக்க்ஷமீது எவ்வளவு வெறுப்பு இருக்கிறதோ, அதைவிடவும் கருணாநிதிமீது இரட்டிப்பு வருத்தமும் கோபமும் இருக்கிறது. சமீபத்தில் ராஜபக்க்ஷவுக்கு எதிராக இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் போர் குற்றத்தின் மூலம் மனித உரிமைமீறல், சித்திரவதைக்குட்படுத்தல் ஆகிய குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே குற்றச்சாட்டுக்கள் கருணாநிதிமீதும் இருக்கிறது. படிப்படியாக இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக வழக்குகளை தொடுத்தகையோடு கருணாநிதிக்கு எதிராகவும் நிச்சியமாக வழக்குப்பதிவு செய்யும் முனைப்போடுதான் புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள். அப்படி எவரும் முயற்சிக்காவிட்டாலும் நானாவது கருணாநிதிமீது படுகொலை, கொலைக்கான சதி செய்தவற்றிற்காக வழக்கு தாக்கல்செய்யும் நோக்கோடு பல ஆதாரங்களை சேகரித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசின் உறுதுணையுடன், தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களால் கொன்று குவித்தது போக மீந்திருந்த மக்களை கருணாநிதி தன் சுயநலன் கருதி பயன்படுத்திய, அவரது அரசியலில் மிகவும் கொடுமையான ஒன்றை நீங்கள் மறந்திருந்தாலும் ஞாபக்கப்படுத்த ஒரு சம்பவத்தை கூறுகிறேன்.

போரின் உச்சக்கட்டத்தில் களத்திலிருந்த என் உறவுகள் மருந்து, உணவு, குடிநீர், உடை ஏதுமின்றித்தவித்தபோது அன்னிய தேசத்தில் வாழும் நாங்கள் மருந்து மற்றும் குழந்தைகளுக்கான பால், குடிநீர், சொற்ப உணவுப்பொருட்களை சேகரித்து "வணங்காமண்" என்ற கப்பல் மூலம் ஈழத்துக்கு அனுப்பிவைத்தோம். கப்பல் போய் சேர்வதற்குள் ஈழம் எரித்துமுடிக்கப்பட்டு விட்டது. கப்பல் செல்லுமிடமின்றி கடலில் தத்தளித்தது. அப்போ புலம்பெயர் தேசங்களிலிருந்த சில அமைப்புக்கள் தமிழக அரசை நம்பினர். கப்பலிலுள்ள பொருட்களை ஊனமுற்று மனநலன் பாதிக்கப்பட்டு வக்கரித்துக்ப்போய் "பயித்தியம்பிடித்த நாயின் நிலையில்", தடுப்பு பட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த மக்களிடம் சேர்க்கும்படி, "மரமான" கருணாநிதியிடம் கருணைக்கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கருங்கல்லான கருமி கருணாநிதி, அப்பொருட்களை அந்த பாவப்பட்ட மக்களிடம் சென்றுசேர அனுமதிக்கவே இல்லையே?. இதை நீங்கள் மறந்திருக்கக்கூடும். எங்களால் எப்படி அக்கா இப்படி ஒரு கொடூரனை மறக்கமுடியும்? மன்னிக்க முடியும்.

இந்தப்பழியை வேறு எப்படித்தான் தீர்க்கமுடியும்? கோர்ட்டா கச்சேரியா. தமிழகத்தில் உள்ள தகுதிவாய்ந்த அரசியல் சக்தி ஏதாவது எம் இனத்திற்கு உதவியா நிற்கிறது? காங்கிரஸின் ஆயுதத்திற்கு பலியான ஒவ்வொரு தமிழரின் கொலைக்கும் கருணாநிதிதானே முழுக்காரணம். சோனியா இத்தாலிக்காரி, மன்மோஹன் பொம்மையான பஞ்சாபி, பிரணாப்முகர்ஜி ஹிந்திக்காரன், சிவசங்கர்மேனன் மலயாளி; நாராயணன் மலயாளி, சிதம்பரமும் கருணாநிதியும் வேட்டிகட்டிய தமிழர்கள். இந்த இருவரும் சேர்ந்து வேடங்கட்டி நடத்திய நாடகத்தால், குடிதண்ணீரும் இல்லாமல் கிடந்த என் தாயும், வயிற்றில் குழந்தையை சுமந்த சகோதரியும், அப்பனும் அண்ணன் தம்பியிம் ஷெல்க்குண்டிலும், எரிகுண்டிலும் ராணுவத்தின் ரவைகளிலும் கருகிச்சாகும்போது, தமிழகத்தில் இந்த நாசக்காரர்கள் என்ன செய்துகொண்டிருந்தனர் என்பதை பார்த்தவர்தானே நீங்கள். இப்பொழுது இரண்டு பொழுது விடிவதற்குள், அரசியலில் இல்லாத அரசியல்வாதியாக, சீமானுக்கு கடிதமெழுதி இணையத்தளங்களில் அழுகிறீர்களே, எங்களின் அவலத்தை கொஞ்சமாவது சிந்தித்தீர்களா?

உள்நோக்கம் எதுவுமில்லாமல் உண்மையாக ஈடுபாட்டுடன் நீங்கள் நடந்துகொள்ளுபவராக இருந்தால், குறிப்பிட்ட அந்தக் கடிதத்தை சீமானிடம் நேரடியாக சேரும் வண்ணம் அவருக்கு அனுப்பவேண்டியதுதானே. அதுதானே முறையும் கூட. அல்லது இவ்வளவு அக்கறையுள்ள நீங்கள் சீமானை சந்தித்து நேரடியாக இதுபற்றி விவாதித்து முடியாத பட்சத்தில் ஒரு அறிக்கையாக நடந்த உண்மைகளை வெளியிட்டிருக்கலாமே. அதுதானே தர்மம்.

உங்களைப்போல பலரிடம் என் இனமும் சரி, எங்கள் தலைவனும் ஏமாற்றப்பட்டிருக்கிறோம், என்பதை மிகவும் வேதனையோடு தெரியப்படுத்துகிறேன்.

எனது சிறுவயதில், தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் தோழர் தியாகு அவர்களால் எழுதப்பட்டு, தொடராக வெளிவந்த "சுவருக்குள் சித்திரங்கள்" தொடரை எனது தகப்பனார் படிப்பதை பார்த்திருக்கிறேன். அந்தத்தொடரில் கம்பிக்கூண்டுக்குள் தண்டனைக்கைதியின் உடையுடன் நின்றுகொண்டிருக்கும் ஒரு படம் இன்றும் எனது மனத்திரையில் பதிந்திருக்கிறது. அப்படி பாதிக்கப்பட்ட தியாகு அவர்கள்தான் உங்கள் கணவர் என்பதையும் உங்கள் வாக்குமூலமாகத்தான் எங்கோ படித்தறிந்தேன்.

அதே தியாகு அவர்கள், சீமான் சிறையில் இருந்தபோது சீமானின் விடுதலைக்காக சிரத்தையுடன் பாடுபட்டதும் நான் அறிந்துள்ளேன். அவ்வளவு நெருக்கத்தை சீமானுடன் கொண்டிருக்கும் நீங்கள், சீமானின் நிலைப்பாட்டையும் யதார்த்தமான ஈழமக்களின் நியாயப்பாட்டையும் அறிந்துணர்ந்து பேசி முடிவுக்கு வராமல், முற்றுமுழுதாக ஈழமக்களின் அழிவின்பால் உருவாகி ஈழத்துரோகத்திற்கு தண்டனை கொடுப்பதற்காக, காலத்தால் தோற்றப்பட்டு ஒருபெரும்சக்தியாக வளர்ந்து தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் நடுக்கத்தை உண்டுபண்ணிக்கொண்டிருக்கும், நாம் தமிழர் இயக்கத்தையும், சீமானையும், நீங்கள் வெளியிட்டுள்ள குறுகிய அரசியல் கடிதம், பாம்பும் ஏணியும் விளையாட்டில் சீமானையும் ஈழ வக்கிரங்களையும் தள்ளி விடுவதுபோலில்லையா? ஏதோ ஒன்றால் உருவான ஒன்றை முற்றிலும் சம்பந்தமில்லாத ஒன்றிற்கு முண்டு கொடுக்கச்சொல்லுகிறீர்களா?

ஜெயலலிதாவையோ, கருணாநிதியையோ நம்பி எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. ஆனாலும் குறிப்பிட்ட இரண்டு தற்குறிகளையும் அவர் தேவையில்லாமல் எதிர்க்க விரும்பவுமில்லை, இயக்கத்திலிருக்கும் உறுப்பினர்கள் சிலர் இவர்கள் மீது சிலசமயம் ஆத்திரங்கொண்டாலும், தலைவர் கூறும் பதில் 'அவர்கள் பட்டம் பதவி பணத்துக்காக போராடும் அரசியல்வாதிகள். அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் நடந்துகொள்ளுவார்கள். அதை விட்டுவிட்டு எங்கள் வேலையை நாம்தான் பார்க்கவேண்டும்' என்பார்.

தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 20 வயதாக இருக்கும்போது கருணாநிதிக்கு வயது 50. அந்த 20 வயதுகளிலேயே கருணாநிதி பற்றி நன்கு புரிந்துகொண்டு பிரயோசனமற்ற ஒரு தொடர்பாடலையும் தலைவர் பிரபாகரன் கருணாநிதியுடன் வைத்துக்கொள்ளவில்லை.

நீங்கள் கூறுவதுபோல் காங்கிரசை எதிர்க்க, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்து பிரச்சாரம் செய்து போட்டிக்கு ஆட்களையும் நிறுத்தி மற்ற இடங்களில் சமரசம் சாதித்தால் எப்படியிருக்கும் என்பதை 2009 பாராளுமன்றத்தேர்தலில் நீங்கள் கண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

எதிரிக்கு எதிரிதான் நண்பன். முதலில் கருணாநிதியை களையெடுக்கவேண்டிய தேவையிருக்கிறது. 2009 ஈழத்தின் இறுதி சங்காரத்தின்போது வைகோவால் ஜெயலலிதாவை தமிழர்களுக்காக குரல் கொடுக்கச்செய்ய முடிந்தது. ஒருநாள் உண்ணாவிரதம் இருத்தமுடிந்தது. தமிழீழத்தை பெற்றுத்தருவேன் என்று சொல்லவைக்க முடிந்தது. குறைந்தபட்சம் ஜெயலலிதாவுடன் கூட்டுவைத்து அரசியல் செய்யும் வைகோ அவர்கள் முற்று முழுதாக ஜெயலலிதா எதிர்த்துக்கொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் சார்பாக தான் நினைக்கும் அனைத்தையும் செய்ய முடிகிறது. அப்படி இறங்கிவரும் ஜெயலலிதா காலமாற்றத்தையும் யதார்த்தத்தை மனதில்கொண்டு மாறுவதற்கான சந்தற்பங்கள் நிறையவே இருக்கின்றன. ஜெயலலிதா பயப்படுகிற அல்லது எதிர்க்கிற விடுதலைப்புலிகளும் இப்போதைக்கு ஈழத்தில் இல்லையென்றாகி விட்டிருக்கிறது. ஈழத்து மக்கள் மீது கருணாநிதியைப்போல ஜெயலலிதா கொலை வெறி கொண்டவராகவும் தெரியவில்லை.

போர்முடிவடைந்து இரண்டு வருடங்களை அண்மிக்கின்றன. போர்முடிந்தபின் ஈழத்தமிழர்களுக்காக கருணாநிதி கொடுத்த வாக்குறுதிகளும் எழுதிய கடிதங்களும் எந்தத்தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் அப்படியே நிலுவையில் கிடக்கின்றன. இந்த நிலையில் திரும்பவும் வாக்குமாறிப்போய்க்கிடக்கும் கொலை வெறி பிடித்த கருணாநிதியின் வெற்றி வாய்ப்புக்கு பரிந்துரைக்கிறீர்களே. உங்களை நினைத்து மிகவும் பரிதாபப்படுவதைத்தவிர வேறு எதுவும் முடியவில்லை.

கருணாநிதியால் இதுவரை ஏதாவது செய்ய முடிந்திருக்கிறதா? அல்லது அவரால் ஒன்றும் செய்ய முடியாமல்தான் இருக்கிறதா? தமிழகத்தில் அனேகரால் மதிக்கப்படும் அறிவாளி "தமிழருவி மணியன்" அவர்களிடம் சற்று ஆலோசனை செய்து பாருங்கள். 'தமிழினம் எக்கேடு கெட்டு அழிந்தாலும் தன் குடும்பங்களின் வளர்ச்சிக்காக காங்கிரசை விட்டு விலக கருணாநிதி தயாராக இல்லை' என்று கூறுகிறார். நானும் கூட நானும் கூட என்று கூவிக்கொண்டு கருணாநிதி செய்யும் அதி உச்சமான நரியை வென்ற தந்திரத்தை நீங்கள் அறிந்தொகொள்ளாததற்கு வருந்துகிறேன் வெட்கப்படுகிறேன்.

யுத்தநிறுத்தம் மத்திய அரசு செய்யாவிட்டால், கூண்டோடு கைலாயம் போய் பதவி விலகுவோம் என்றார். உயிரை விடுவேன் என்றார். ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவமுடியுமென்றார். ஒருநாடு இன்னொரு நாட்டுப்பிரச்சினையில் எப்படித்தலையிட முடியுமென்றார். பிரபாகரன் பயங்கரவாதியென்றார். சகோதர யுத்தம் செய்வதாக புலிகள் இயக்கத்தை குற்றம் சாட்டினார். முத்துக்குமார் தீ மூட்டி செத்தபோது மிக இளக்காரமாக அந்தப்பயலுக்கு வீட்டில் ஏதோ பிரச்சினை என்றார். இன்னுமொருவர் செத்தபோது மிக மலிவாக, மனநோய் பாதிக்கப்பட்டவர் என்றார். ஒவ்வொரு நாளும் 1,000 - 2,000 - 5,000 என்று என் உறவுகள் செத்தழிந்தபோதும் கடிதமெழுதி டில்லிக்கு அனுப்புவதாக கதை விட்டவர், தனது வாரிசுகளின் பதவிப்பேரம் பேசலுக்கு டில்லிக்கு பறந்து சோனியாவுடன் காலில் விழுந்து பதவி பெற்றாரே, எதை மறக்கச்சொல்லுகிறீர்கள்?

1/2 நாள் உணவு ஒறுப்பு வேள்வி என்று கூறி கடற்கரையில் குளிர்சாதன வசதியுடன் மனைவி, துணைவி, மக்கள், கூட்டம் சூழ காற்றுவாங்கி யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்தியுள்ளேன் என்று கூறிய பச்சைப்பொய்யை ஜீரணிக்கச்சொல்லுகிறீர்களா? நீங்கள் கூறுவதும் திருமா கூறுவதும் ஒன்றுதானே, நீங்கள் அரசியலில் இல்லையென்கிறீர்கள் திருமா ஒற்றைப்பதவியுடன் அரசியலில் இருக்கிறார் அவ்வளவுதானே வித்தியாசம்.

நீங்கள் கூறும்படி காங்கிரசை ஒட்ட அழிக்கவேண்டுமென்றால், காங்கிரஸ் என்ற நச்சுமரத்தை பசளையிட்டு நீரூற்றி பாதுகாக்கும் சக்திகளையும், நச்சுமரங்கள் வேரூன்றி வளர்வதற்கு காரணமான புறம்போக்கு நிலத்தையும், தீயிட்டு எரித்து அழித்துத்தானே சுத்தப்படுத்தி புனிதமாக்க முடியும். வெறுமெனவே நீரூற்றுவதை தற்காலிகமாக நிறுத்தினால், நீண்டதொலைவுக்கு வேரோடி நாட்டின் ஈரத்தன்மையையே உறுஞ்சிக்கொண்டிருக்கும் அந்த விஷமரங்களின் ஆதிக்கத்தையும் ஆணவத்தையும் கட்டுப்படுத்திவிட முடியுமா?

இன்று முதலாவதாக அப்புறப்படுத்தப் படவேண்டிய தீயசக்திகள், கருணாநிதியும் தி.மு.க.வும் கூட்டுச்சேர்ந்து இனப்படுகொலை செய்த காங்கிரஸையும் இல்லாமல் செய்ய வேண்டிய, கலாச்சாரப்புரட்சி தமிழகத்துக்கும் தமிழனுக்கும் தேவைப்படுகிறது. இந்த கலாச்சாரப்புரட்சிக்கு சரியான நேரமும் இதுதான். இந்த விடயம் வெற்றியளிக்கும் பட்சத்தில் இனி வரும் காலங்களில் ஜெயலலிதாவின் கட்சியாக இருந்தாலும் சரி, வேறெந்தக் கட்சியாகவிருந்தாலும் சரி; தமிழனிடம் சரியான பாடம் கற்றுக்கொண்ட படிப்பினையை பட்டறிவாக புரிந்துகொள்ளும்.

கடைசியாக ஒன்று. குறுகிய ஒரு காலத்துக்குள் உங்கள் பால் மிகவும் ஈர்க்கப்பட்டவள் நான். எனது கணினியின் முகப்பிலும் சத்தியமாக உங்கள் படத்தையும் தலைவரின் படத்துடன் ஐந்து ஆறு மாதங்களாக வைத்திருக்கிறேன். இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அது இருப்பதும் இல்லாமல் போவதும் உங்கள் நடவடிக்கையும் காலமும் தீர்மானிக்கட்டும். தலைவரின் மறுபிரவேசத்தை தர்மத்தாயும் ஈழப்பூமித்தாயும் நீண்டகாலத்துக்கு தள்ளிப்போடப்போவதுமில்லை. கவலையற்றிருந்த எங்களை தலைவரின் இடைவெளி பல சக்திகளுக்கு பதிலளிக்க வைத்து சோதிக்கிறது.

எங்கள் விடுதலைப்போராட்டத்தை தலைவரோ, நாங்களோ விரும்பி வேண்டி எடுத்துக்கொண்டதுமில்லை. ஈழத்தில் கிட்டத்தட்ட 45-50 விடுதலை இயக்கங்கள் உருவாகியிருந்தாலும், முற்று முழுதான போராட்ட இயக்கமாகவும், மக்கள் இயக்கமாகவும், மிகவும் கட்டுப்பாடு கொண்ட வழிமுறையை தோற்றுவித்த தீர்க்கதரிசனமான தலைவனைக் கொண்ட இயக்கமாக, தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில் வந்த ஒன்றுதான் "தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்." இன்று ஒரு பின்னடைவை என்னினமும் என் "தலைவனும்" சந்தித்து நிற்கும் காலகட்டம். ஆனாலும் தலைவன் கொண்டகொள்கையிலிருந்து எந்த ஒரு ஈழத்தமிழ் பிறப்பும் நிமிடத்துக்கு ஒன்றென மாற்றி சிந்திக்க பழக்கப்படவில்லை. புலம்பெயர் தேசத்திலோ சந்திர மண்டலத்திலோ நாடு விட்டுச்சென்று வாழ நேரிட்டாலும் ஈழத்தமிழன் அழியும் வரை ஈழப் போராட்டம் தொடரும்.

தமிழ்நாட்டின் அரசியல் விளையாட்டு எங்களுக்கு ஒருபோதும் ஒத்துப்போவதுமில்லை. எவராவது உதவினால் நாங்கள் நன்றியுடன் சிரம் தாழ்த்தி வரவேற்போம். மாறாக எவராவது துரோகமிழைத்தாலும் அவர்களை புறக்கணித்து ஒதுக்கிவிட்டு ஒதுங்கி எங்கள் முயற்சியை முன்னெடுத்து தமிழீழம் கிடைக்கும்வரை போராடுவோம்.

இப்போ சகோதரன் செந்தமிழன் சீமான், அவர்களின் உணர்வும் ஈடுபாடும் எங்களை அவரோடு மிக நெருக்கமாக இணைத்திருக்கிறது. உள்ளூரில் அவர் எடுக்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கும் அவரே பொறுப்பாளி. நாங்கள் அதை புரிந்து கொள்ளவும் முடியாது. முள்ளில் விழுந்துள்ள சகோதரியின் புடவையை சமயோசிதமாக அவர் எடுக்கத்தலைப்பட்டிருக்கிறார். எங்கள் மன எண்ணங்களையும் அவருக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். இருந்தும் அவர் வெற்றிபெறுவார் என்பதுதான் எங்கள் நம்பிக்கையும், அத்துடன் சீமான் கொண்டகுறியிலிருந்து சிதறமாட்டார் என்பதும் ஈழ மக்களின் அசையாத நம்பிக்கையுமாகும்.

இருந்தும் வெல்வோம்.

உங்களை எனது மடல் எந்தவகையிலாவது புண் படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். ஏனெனில் நான் வேதனையே வாழ்வாக பழகிக் கொண்டவள்.

அன்புடன் ஈழத்தமிழச்சி
ஆரணி.

இம்மடல்
ஈழதேசம் இணையம் ஊடாக.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. I've got an e-mail, from Ela Gnairu, in which he opined on this post. Here is the same for you friends = = = = =

    From a.ela gnairu
    To

    Date Tue, Feb 15, 2011 at 9:59 AM
    Subject Re: தாமரை அவர்களுக்கு ஒரு ஈழத் தமிழச்சியின் ஆதங்க மடல்...

    Thamarai avarkalea varadduth thanamaaka sinthikkaatheerkal
    ungkalai munnilaippaduththi tamizhanai veezhtththi vidaatheerkal
    = = = = =

    தயவுசெய்து post மீதான உங்கள் கருத்துகளை, எதிர் வினைகளை Blog-ல் Comment-ல் போட்டுவிடுங்கள். எனது personal e-mail ID-க்கு வேண்டாம்.

    Thanks a lot, friends.

    ReplyDelete